மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டுக்கு ஆந்திராவில் இருந்து சைக்கிளில் வந்த இருவர்!


மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சி தேசிய மாநாட்டுக்கு ஆந்திராவிலிருந்து சைக்கிளில் வந்த 2 பேருக்கு மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான கட்சியினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் 24-வது தேசிய மாநாடு ஏப். 2-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. நிறைவு நாளான இன்று செந்தொண்டர் பேரணி பாண்டிகோயிலில் இருந்து தொடங்கி பொதுக்கூட்டம் நடைபெறும் வண்டியூர் மஸ்தான்பட்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள திடலில் நிறைவடைகிறது. இதில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான கட்சியினர் வந்துள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குப்புசாமி (50), சல்லா வெங்கடய்யா (70) ஆகியோர் சைக்கிளில் 510 கி.மீ. தூரம் பயணித்து நேற்று மாலை மதுரை தமுக்கம் மைதானத்துக்கு வந்தனர். அவர்களை கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட கட்சியினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து குப்புசாமி கூறுகையில், 2008ம் ஆண்டு கோவையில் நடந்த தேசிய மாநாட்டுக்கு திருப்பதியில் இருந்து கோவைக்கு சைக்கிளில் சென்றேன். அதேபோல், தற்போது மதுரையில் நடைபெறும் மாநாட்டுக்கும் சைக்களில் வர வேண்டும் என நானும், எனது நண்பர் சல்லா வெங்கடய்யாவும் முடிவு செய்தோம். மார்ச் 29ம் தேதி திருப்பதியில் இருந்து புறப்பட்டோம். செந்தெண்டர் பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் பங்கேற்ற பின்பு மீண்டும் சைக்கிளில் திருப்பதி செல்ல உள்ளோம் என்று கூறினார்.

x