‘ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியம்...’ - பிரதமர் மோடி நெகிழ்ச்சி பகிர்வு


ராமேசுவரம்: இலங்கையிலிருந்து ராமேசுவரம் வரும் வழியில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியம் தனக்கு கிடைத்தாக பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இலங்கை ஏப்ரல் 4 அன்று பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றார். மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரம் சென்றார். அவரை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, அந்நாட்டு அமைச்சர்கள் விஜித ஹேரத், வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்கவும் அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இலங்கையின் பௌத்த துறவிகளான பிரதான சங்கநாயக்க வண மற்றும் பல்லேகம ஹேமரதன நாயக்க ஆகியோரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின்போது, ''தான் பிறந்த குஜராத் பிரதேசத்தில் 60களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த நினைவுச்சின்னங்களை இலங்கையில் காட்சிப்படுத்து குறித்தும், இந்தியாவிலுள்ள புத்த கயாவில் ஆன்மீக நகரமாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

மேலும், அனுராதபுரத்தில், மாஹோ-ஓமந்தை இடையேயான தரமுயர்த்தப்பட்ட ரயில்பாதையினை பாதையினை இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்க இணைந்து பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதுபோல, மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய தரம் உயர்த்தப்படும் ரயில்பாதைக்கான அடிக்கல்லையும் இருவரும் இணைந்து நாட்டினர்.

தனது இலங்கை பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், இலங்கைக்கான எனது பயணத்தின் போது இலங்கை மக்களின் அன்பான அரவணைப்புக்காக அதிபர் அநுரகுமார திசாநாயக்க, இலங்கை அரசிற்கும், இலங்கை மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொழும்பு, அநுராதபுரம் இரண்டு நகரங்களும் இந்திய இலங்கை இரு நாடுகள் இடையே ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் பண்பாட்டு உறவுகளை மீள உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது, என தெரிவித்துள்ளார். அனுராதபுரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தனது இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு அங்குள்ள விமானதளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேசுவரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.

இலங்கையிலிருந்து ராமேசுவரம் வரும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே உள்ள ராமர் சேது பகுதியை ஹெலிகாப்டரிலிருந்து தரிசனம் செய்தார். இது குறித்து தனது எக்ஸ் தனது எக்ஸ் வலைதளம் பக்கத்தில், இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமநவமி நாளில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியமும், ராம்லாலாவின் சூரிய திலகத்தை தரிசனம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது. பகவான் ஸ்ரீராமரின் அருள் நம் அனைவர் மீதும் நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

x