அணு உலையை சுற்றி வசிக்கும் மக்கள் பயப்பட தேவையில்லை: புற்றுநோய் சிகிச்சை நிபுணர் தகவல்


ரேடியேஷன் வெளியே வராதபடி பலத்த கட்டமைப்புடன் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளதால் அணு உலையை சுற்றி வசிக்கும் மக்கள் பயப்பட தேவையில்லை என புற்றுநோய் சிகிச்சை நிபுணரும், சங்க பொருளாளருமான டாக்டர் எஸ்.ஜி.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டை, தமிழ்நாடு புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். செயலாளர் அய்யப்பன், பொருளாளர் பாலமுருகன், துணை தலைவர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த, மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த புற்றுநோய் நிபுணர்கள், புற்றுநோய் அறிவியில் வல்லுநர்கள், மருத்துவ கல்லூரி பயிற்சி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவிலும், தமிழகத்திலும் அதிக அளவில் பரவி வரும் புற்றுநோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள், புகையிலை பயன்பாடு, புகைபிடித்தல், தவிர்த்தல், புற்றுநோய் தடுப்பு மருந்து, தடுப்பு ஊசி ஆராய்ச்சி ஆகியவை பற்றி கலந்துரையாடினர். மேலும், உலக அளவில் புற்று நோயை கட்டுப்படுத்த ஆண்டுதோறும் மருத்துவ விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவனம் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், புற்றுநோய் நிபுணர்கள் மாநாட்டின் விழா மலரை வெளியிட்டனர். இவ்விழாவில், பங்கேற்ற புற்றுநோய் நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் புற்றுநோய் விழிப்புணர்வு, ஆரம்பகட்ட நோய் கண்டறிதல் குறித்து விரிவாக பேசி, ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டனர்.

தமிழ்நாடு பங்கேற்ற புற்று நோய் நிபுணர்கள் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஜி.பாலமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நம் உடலில் ஜீன்களில் ஏற்படும் ஒரு மாற்றம்தான் புற்று நோய் ஆகும். எந்த வயதினருக்கும் புற்றுநோய் வராது என்று சொல்லிவிட முடியாது. பிறந்த குழந்தை முதல் 90 வயது வரை உள்ளவர்களுக்கு புற்று நோய் வருகிறது. ரேடியேஷன் (கதிர்வீச்சு) மூலமாகவும் புற்று நோய் வரலாம்.

தற்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய பகுதியில் இன்றும் புற்றுநோய் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ரேடியேஷன் (கதிர்வீச்சு) வெளியே வராதபடி பலத்த கட்டமைப்புடன் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால், அதன் அருகில் வசிக்கும் மக்கள் கதிர்வீச்சு பரவும் என பயப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

x