சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், உணவு கூடங்களில் தொடர் ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில், அண்மையில் தர்பூசணி பழங்களில் ரசாயன ஊசி செலுத்தப்படுவதாக தெரிவித்திருந்தார். இதனால் தர்பூசணி விற்பனை பாதிப்படைந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதற்கிடையே, கடந்த 3-ம் தேதி அண்ணாசாலையில் உள்ள ஓட்டலை சோதனையிட வந்த சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், திடீரென திரும்பிச் சென்றனர்.
மேலிட அழுத்தம் காரணமாக அவர்கள் திரும்பிச் சென்றதாக செய்திகள் பரவியது. உடல் நிலை சரியில்லாததாலேயே திரும்பிச் சென்றதாக சதீஷ்குமார் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது பொறுப்பை திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், கூடுதலாக கவனித்துக் கொள்வார் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.