நீட் தேர்வை ரத்து செய்ய அரசின் திட்டம் என்ன? - மக்களுக்கு தெரிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்


நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையை தடுக்கவும் தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ளும் அச்சத்தால் தற்கொலை செய்து செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் தற்கொலைகளை தடுக்க முடியாது. பிள்ளைகள் மருத்துவம் படிப்பதுதான் தங்களுக்கு பெருமை என்ற மாயையிலிருந்து பெற்றோர் வெளியில் வர வேண்டும். ஏராளமான படிப்புகளில் ஒன்றை படிக்க மாணவர்களும் அதை அங்கீகரிக்க பெற்றோரும் தயாராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்து கொண்டது. மாணவர் கொல்லி நீட் தேர்வை திணிப்பதில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசோ, அந்த சட்டத்தை ஏற்க மறுத்து விட்டது. அதனால் நீட் அச்சுறுத்தல் நிரந்தரமாகி விட்டது.

நீட் தேர்வுக்காக ஏற்கெனவே நடத்தப்பட்ட சட்ட போராட்டங்களும், சட்டமியற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்ட நிலையில், அடுத்து தமிழக அரசு என்ன செய்ய போகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்காது. நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

x