காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மேலஅலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் தொழிலாளியான இவர் 1999 செப்டம்பர் 17-ம் தேதி வழக்கு விசாரணைக்காக தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போலீஸார் தாக்கியதில் வின்சென்ட் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கிருஷ்ணம்மாள் புகார் அளித்தார். மேலும், கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து, காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், காவலர்கள் ஜெயசேகரன், ஜோசப் ராஜ், பிச்சையா, செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம்சாட்டப்பட்ட சோமசுந்தரம், ராமகிருஷ்ணன், ஜெயசேகரன், பிச்சையா, வீரபாகு, ஜோசப்ராஜ், செல்லத்துரை, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகிய 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். ஓய்வுபெற்ற காவலர்கள் சிவசுப்பிரமணியன், ரத்தினசாமி ஆகியோர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் தற்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக உள்ளார். காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக உள்ளார். காவலர் பிச்சையா அதே பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார். தண்டனை பெற்றுள்ள ஜெயசேகரன், ஜோசப் ராஜ், செல்லதுரை, வீரபாகு, சுப்பையா மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வழக்கு விசாரணையின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் முழுயையாக ஓய்வு பெற அரசு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிஎஸ்பி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது தென் மாவட்டங்களில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. வழக்கில் தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் கதறி அழுதனர்