கும்பகோணம்: தமிழகம் முழுவதும் பதிவு செய்து காத்திருக்கும் 2 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என கும்பகோணம் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கும்பகோணம் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை உதவி ஆட்சியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்கியராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கும்பகோணம் கோட்ட துணை மேலாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமல்நாதன் தலைமையில் விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மின் மோட்டாரை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகம் முழுவதும் புதிய மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருக்கும் 2 லட்சம் விவசாயிகளுக்கு புதிய இணைப்பு வழங்கக் கோரியும், கோடை சாகுபடிக்கு சீரான மின் விநியோகம் செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். தொடர்ந்து, மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசியது: வீரமாங்குடி, மணலூர், பசுபதிகோவில், கணபதிஅக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. எனவே, வேளாண் துறை அதிகாரிகள் வயல்வெளிகளுக்கு சென்று ஆய்வு செய்து மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் அனைத்து வாய்க்கால்கள், ஆறுகளை தூர் வார வேண்டும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும்.
காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையே திருப்புறம்பியத்தில் 300 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆற்றில் தண்ணீர் தடைபட்டு நிலத்தடி நீர் குறையும்போது, ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர்வரத்து குறைந்துவிடுகிறது. எனவே, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். மேலும், மண்ணியாற்றில் இருந்து வாய்க்கால்களில் தண்ணீர் செல்லவில்லை. இந்த வாய்க்கால்களை முறையாக தூர் வார வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளின் கருத்துகளை கேட்டு விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், அந்த பட்ஜெட்டில் விவசாயிகள் தெரிவித்துள்ள கருத்துகள் இடம்பெறுவதில்லை. எடக்குடி மணல் திட்டை தனியார் மணல் குவாரியாக மாற்றுவதை நீர்வளத் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் தடுத்து கிராம மக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
தொடர்ந்து, “விவசாயிகளின் குறைகள் ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும்” என அதிகாரிகள் உறுதியளித்தனர்.