தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், டீ கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உணவக உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பேசியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற உணவங்கள் இயங்கி வருகின்றன. அதேபோல, இன்னும் அதிக எண்ணிக்கையில் உரிமம் பெறாமலும் உள்ளன. அந்த உணவக உரிமையாளர்களும் விரைவில் உரிமம் பெற வேண்டும். மேலும், உணவங்களில் தொடர்ந்து உணவு மாதிரி ஆய்வுக்கு எடுக்கப்பட்டு வருவதால், உணவு தயாரிப்பாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
அனைத்து உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. நெகிழி பைகளில் டீ, காபி, சாம்பார், குருமா போன்றவற்றை பார்சல் செய்துகொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உதிரிகளாக விற்பனை செய்யப்படும் இனிப்பகங்கள், கார வகைகள் மற்றும் இதர உணவு வகைகளிலும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும். உணவு வணிகர்கள் பயிற்சி முடித்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது பயிற்சி முடித்தவர்களை வேலைக்கு வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் கலந்துகொண்டனர்.