பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட தனுஷ்கோடி புதிய ரயில் பாதை: பணிகள் தொடங்குவது எப்போது?


தற்போதைய தனுஷ்கோடி

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்ட அன்றே பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட தனுஷ்கோடி புதிய ரயில் பாதை பணிகள் தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்தால்தான் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் நாள் பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டபோது தனுஷ்கோடி வரை ரயில் இயக்கப்பட்டது. 1964–ம் ஆண்டு ஏற்பட்ட புயலால் ராமேசுவரம்-தனுஷ்கோடிக்கு ரயில் பாதையும் அழிந்து போனது. அதன் பிறகு பாம்பன் பாலமும், ராமேசுவரம் வரையிலான ரயில் பாதையும் மட்டும் சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது. ஆனால் தனுஷ்கோடி ரயில் பாதை சீரமைக்கப்படவில்லை.

பின்னர் நூற்றாண்டை கடந்த பாம்பன் ரயில் பாலத்துக்குப் பதிலாக புதிய ரயில் பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டதுடன், தனுஷ்கோடிக்கும் மீண்டும் ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 01.3.2019 அன்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொலி மூலம் பாம்பன் புதிய ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம்-தனுஷ்கோடி 17.20 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதை ஆகிய 2 திட்டங்களுக்கும் ஒன்றாக அடிக்கல் நாட்டினார்.

இந்த ராமேசுவரம்-தனுஷ்கோடி புதிய ரயில் பாதையில் ஜடாயு தீர்த்தம், கோதாண்ட ராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய புதிய ரயில் நிலையங்களும் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டன. பின்னர், சென்னை ஐஐடியை சார்ந்த பொறியாளர்கள் தனுஷ்கோடிக்கான புதிய ரயில் பாதை திட்டத்தை ஆய்வு செய்து ரயில் பாதையை கடல் சீற்றம், வெள்ளத்திலிருந்து பாதுகாக்க சாலை மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயர்த்தி அமைக்க பரிந்துரைத்தனர். இதனால் இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.208 கோடியிலிருந்து ரூ.700 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

தனுஷ்கோடி ரயில் நிலையம்

ஆனால் செங்குத்து தூக்குப்பாலத்துடன் கடலுக்குள் அமைக்கப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகளே நிறைவுற்று ஏப். 6-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், தனுஷ்கோடி ரயில் பாதை பணிகளில் 6 ஆண்டுகள் ஆகியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ராமேசுவரம்-தனுஷ்கோடி புதிய ரயில் பாதைக்கு தமிழக அரசு இன்னும் நிலம் கையகப்படுத்தி தரவில்லை. இந்த புதிய ரயில் பாதையினால் கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று காரணம் கூறி தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. தனுஷ்கோடி ரயில் பாதைக்கு 28.6 ஹெக்டேர் வனத்துறை நிலம், 43.81 ஹெக்டேர் மாநில அரசுக்கு சொந்தமான நிலம் மற்றும் 3.66 ஹெக்டேர் தனியாருக்குச் சொந்தமான நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும்.

இவற்றை கையகப்படுத்துவதுடன், தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்தால் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும், என்றனர்.

x