இளையான்குடி அரசு மருத்துவமனையில் இரவு நேர பணியில் மருத்துவர்கள் இல்லை: நோயாளிகள் புகார்


இளையான்குடி: இளையான்குடி அரசு மருத்துவ மனையில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை சிவகங்கைக்கு பரிந்துரை செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அரசு மருத்துவமனையில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

உள்நோயாளிகள் பிரிவில் 30 படுக்கைகள் உள்ளன. இம்மருத்துவமனையில் 12 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால், பல மாதங்களாக தலைமை மருத்துவர் மட்டுமே பணியில் இருந்தார். சமீபத்தில் கலந்தாய்வு மூலம் கூடுதலாக 2 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் காலை புறநோயாளிகள் பிரிவை கவனிக்கின்றனர்.

காலை, மாலை இருவேளை உள்நோயாளிகள் பிரிவை கவனிக்கின்றனர். மாலை 5 மணிக்கு பிறகு மருத்துவர்கள் இருப்பதில்லை. இதனால் இரவில் அவசர சிகிச்சைக்கு வருவோர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. போதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற பலரும் தயங்கு கின்றனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் மனோஜ் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்துக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இளையான்குடி பேரூராட்சி மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இளையான்குடி வட்ட மருத்துவமனை பயன்பட்டு வந்தது. ஆனால் இரவு நேரத்தில் மருத்துவர் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வருவோர் சிவகங்கைக்கு செல்லும் நிலை உள்ளது. உடனடியாக போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x