சிவகங்கை: சிவகங்கை தெப்பக்குளம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பை நிரம்பி காணப்படுவதால், நகர மக்கள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை நகரின் மையப் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளம் உள்ளது. 6 ஏக்கரில் அமைந்துள்ள இக்குளம், நகரின் முக்கிய நீராதாரமாக உள்ளது. குளிக்க, துணி துவைக்க உள்ளிட்ட தேவைகளுக்கு மக்கள் பயன்படுத்தி வந்தனர். இக்குளம் நிரம்பினால் மட்டுமே நகரில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டமும் உயரும்.
இங்கு ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா நடைபெறுவதோடு, மற்ற சுபகாரியங்களுக்கும் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. தெப்பக்குளத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வரத்துக் கால்வாய் உள்ளது. மேலும், செட்டியூரணி நிரம்பினாலும் உபரிநீர் வரும்.
கடந்த 1996 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இக்குளம் வறண்டபோது, பெரியாறு நீர் மூலம் நிரப்பப்பட்டது. அதே சமயம் வரத்துக் கால்வாயும் முழுமையாக சீரமைக்கப்பட்டது. இதனால், கடந்த சில ஆணடுகளாக மழைநீர் மூலமே தெப்பக்குளம் நிரம்பி வருகிறது. தற்போது, தண்ணீர் முழுமையாக உள்ளபோதிலும், அதை பயன்படுத்த முடியாதபடி பிளாஸ்டிக் குப்பை நிரம்பி காணப்படுகின்றன.
மேலும், வரத்துக் கால்வாயில் வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து விடப்படும் கழிவுநீரும் தெப்பக்குளத்தில் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சிவகங்கையின் அடையாளமே மாறிவிட்டது. சுற்றுச்சுவர் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. பாதிப்பு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. நகராட்சியிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாததால், அதை சீரமைக்க முடியாமல் விட்டுவிட்டது.
எனவே, தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி பழமையான தெப்பக்குளத்தை சீரமைத்து பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் சிஎம்.துரை ஆனந்த் கூறுகையில், ‘தெப்பக்குளத்தை சீரமைக்க ரூ.5 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். இதன்மூலம் சுற்றுச்சுவரை சீரமைப்பது, நடைபாதை, மையம் மண்டபம் அமைக்கவும் முடிவு செய்துள்ளோம். அரசு நிதி ஒதுக்கியதும் பணிகள் தொடங்கும்’ என்றார்.