அரசு பேருந்தை இயக்கும்போதே திடீர் மாரடைப்பு: ஏர்வாடியில் 35 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநர்


மாரியப்பன்

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் புளியங்குடி வடக்கு கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன்(50). புளியங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், புளியங்குடியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவிலுக்கு அரசு பேருந்தை இயக்கி வந்தார். நெற்கட்டுசெவலை சேர்ந்த ராமராஜா நடத்துநராக இருந்தார்.

இந்த பேருந்து திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடிக்கு காலை 10 மணியளவில் வந்தது. அங்கு பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் ஏறியவுடன், நாகர்கோவிலை நோக்கி பேருந்து கிளம்பியது. அப்போது பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். கிளம்பிய சில நிமிடங்களில் ஏர்வாடி தெற்கு பிரதான சாலை கனரா வங்கி அருகிலுள்ள வேகத்தடையில் சென்றபோது, ஓட்டுநர் மாரியப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அவர் உடனடியாக பேருந்தை சாலையோரம் ஓரங்கட்டி நிறுத்திவிட்டு, பேருந்து ஸ்டியரிங்கில் சரிந்து விழுந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து, பொதுமக்கள் உதவியுடன் ஓட்டுநரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் 35 பயணிகளை காப்பாற்றிவிட்டு ஓட்டுநர் மாரியப்பன் உயிரிழந்த சம்பவம், அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக மேலாளர் சரவணன், பணிமனை மேலாளர் வினோஜ் உள்ளிட்ட அலுவலர்கள் அங்குவந்து, மாற்று பேருந்து மூலம் பயணிகளை நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.

x