திருப்பூர்: திருப்பூரின் வளர்ச்சிக்கு ஏற்றுமதியுடன், உள்நாட்டு உற்பத்தியும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள பின்னலாடைகள் நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு சந்தைகளுக்கு, ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பஞ்சாப், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் பின்னலாடை உற்பத்தி செய்வதால், திருப்பூரில் தற்போது உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிட்டது. இந்நிலையில், திருப்பூர் காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் கோடை கால வியாபாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பனியன் வியாபாரிகள் சிலர் கூறியதாவது: உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்துக்கான காதர்பேட்டையில், பின்னலாடைகள் அதிகளவில் கையிருப்பு உள்ளன. டில்லி மற்றும் மும்பையில் இருந்து ஆர்டர்கள் குறைந்துள்ளன. வட மாநிலங்களில் தற்போது ஆடைகள் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளதால், வியாபாரத்துக்காக அவர்கள் திருப்பூர் வருவது குறைந்துவிட்டது. சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து பாலியஸ்டர் துணிகள் நேரடியாக கொல்கத்தாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அங்கிருந்து திருப்பூர் கொண்டு வரப்பட்டு, இங்கு ஆடையாக மாற்றி விற்பனை செய்து வந்த காலம்மாறி, அந்தந்த மாநிலங்களிலேயே ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், அங்கு மலிவு விலையில் ஆடைகள் விற்கப்படுகின்றன. இதன் காரணமாக திருப்பூரின் வர்த்தகம் வெகுவாக குறைந்துவிட்டது. திருப்பூர் என்றாலே பருத்தி ஆடைகள்தான் பிரபலம். அந்த நிலை தற்போது மாறி இங்கும் பாலியஸ்டர் துணிகளே அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பருத்தி ஆடைகள் உற்பத்தி குறைவால் உள்நாட்டு வியாபாரமும் 80 சதவீதம் குறைந்துள்ளது. கோடை காலத்தில் மட்டும் சுமார் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வர்த்தகம் செய்து வந்த காதர்பேட்டை பனியன் மார்க்கெட் சமீபகாலமாக ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்வதே பெரும்பாடாக உள்ளது. எனவே, இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கு குறைந்தபட்ச வரியை மத்திய அரசு விதிக்க வேண்டும். பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் திருப்பூர் பின்னலாடை தொழிலும், வியாபாரமும் நிலையாக இருக்கும், என்றனர்.
காதர்பேட்டை செகண்ட் சேல்ஸ் வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் எம்.ஜி.குமார் கூறியதாவது: வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் இங்கு வந்து தொழில் பழகிவிட்டு, தங்கள் மாநிலங்களில் தொழிலை தொடங்கிவிட்டனர். இதனால், திருப்பூரின் கோடைகால வர்த்தகம் குறைந்துள்ளது. டெல்லி, ஒடிசா, தெலங்கானா, கர்நாடகம் என பல்வேறு பகுதிகளிலும் பனியன் உற்பத்தி தொடங்கிவிட்டதால், இங்கு வர்த்தகம் கடுமையாக சரிந்துள்ளது. கட்டிட வாடகை, ஆள் கூலி, மின் கட்டணம் என பல்வேறு சிரமங்களை கடை உரிமையாளர்கள் சந்திக்கின்றனர். திருப்பூர் உள்நாட்டு வர்த்தகத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.