கோவை: தமிழகம், கேரளம், கர்நாடகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 390 ஆக உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு அண்மையில் நடத்தப்பட்டது. இதில் வெண்முதுகு பாறு, கருங்கழுத்துப் பாறு ஆகியவைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் மற்றும் நெல்லை வனவிலங்கு சரணாலயம் ஆகியவைகளில் 106 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதுகுறித்து, தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு கூறியதாவது: தமிழகம், கேரளம், கர்நாடக ஆகிய வனப்பகுதிகளில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 320-ல் இருந்து 390 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக 157 பாறு கழுகுகளும், கேரளாவில் 125, கர்நாடகத்தில் 108-ம் பதிவாகி உள்ளன.
இதில், தமிழகத்தில் மொத்த பாறு கழுகுகளின் எண்ணிக்கை 2022-23ம் ஆண்டுகளில் 100 ஆக இருந்தது. 2023-24ம் ஆண்டுகளில் 157 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக 110 வெண்முதுகு பாறு கழுகுகள், 31 கருங்கழுத்து பாறு கழுகுகள், 11 செம்முக பாறு கழுகுகள், 5 மஞ்சள் முகப்பாறு கழுகுகள் பதிவாகி உள்ளன.
முதுமலை புலிகள் காப்பக பகுதியில் பாறு கழுகுகள் அதிகளவில் கூடு கட்டி வசிப்பது தெரியவந்துள்ளது. பாறு கழுகுகளின் மரணத்திற்கு காரணமான ‘டைக்ளோஃபெனாக்’ கால்நடை மருந்து தடையை திறம்பட அமலாக்கியது மற்றும் பாறு கழுகு பாதுகாப்பு குழு அமைத்தது மாற்றத்தை ஏற்படுத்தியது. இதில் 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை பெறப்பட்டது.
அண்மையில் ‘நிமுசுலைட்’ மருந்து தடை விதிக்கப்பட்டு, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 மருந்தகங்களின் உரிமைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. பாறு கழுகுகளின் பாதுகாப்பு என்பது அரசு துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, அறிவியல் ரீதியிலான கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்" என்றார்.
இதுகுறித்து, பாறு கழுகுகள் ஆய்வில் ஈடுபடும் அருளகம் அமைப்பின் செயலர் பாரதிதாசன் கூறும்போது, "இறந்த விலங்குகளை மட்டுமே சாப்பிட்டு வாழும் பாறு கழுகுகளை பாதுகாக்கும் வனத்துறை முயற்சி பாராட்டுக்குரியது. வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் இயற்கையாக இறக்கும் கால்நடைகள், விபத்துகளில் இறக்கும் கால்நடைகளை வனத்துறை வாகன வசதி செய்து வனப்பகுதிகளில் கொண்டு சென்று போட வேண்டும்.
அப்போது பாறு கழுகுகளுக்கு தேவையான உணவு கிடைக்கும். ட்ரோன் மூலம் கண்காணித்தல், ஜிபிஎஸ் பொருத்தி கண்காணித்தல் ஆகிய அறிவியல் ரீதியான ஆய்வுகள் தொடர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.