தஞ்சாவூர்: உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தும், மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு யாகசாலையில் தமிழ் மொழி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கை தமிழ் வழியில் நடத்த உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த சண்டிகேசுவரி சேவை அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கில், கோயில் குடமுழுக்கின்போது யாகசாலையில் மொத்தம் 73 வேள்விக் குண்டங்களை அமைப்போம். அவற்றில், 36 குண்டங்களில் தமிழ் மந்திரங்களை ஓதி வழிபாடு செய்வோம் என இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ஆர்.செந்தில்குமார் உறுதி அளித்திருந்தார். அதையே, சென்னை உயர் நீதிமன்றமும் ஆணையாக்கி, இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை முற்றிலுமாக புறக்கணித்து, மருதமலை முருகன் கோயில் குடமுழுக்குக்காக மார்ச் 30-ம் தேதி தொடங்கி நடைபெற்ற யாகசாலை வழிபாட்டில் சம்ஸ்கிருதத்தில் மட்டுமே மந்திரங்களைச் சொல்லி, தமிழ் மந்திரங்களைப் புறக்கணித்துள்ளனர்.
நீதிமன்ற ஆணை இருந்தும்கூட, மருதமலை கோயில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குடமுழுக்குகளிலும் தமிழ்ப் புறக்கணிப்பை அரசு செய்து வருகிறது. குடமுழுக்கின் மையச் சடங்குகள் நடைபெறும் கருவறை, யாகசாலை, கோபுரக் கலசம் ஆகிய 3 நிலைகளிலும் சம்ஸ்கிருத வழிபாட்டை நடத்திவிட்டு, இவற்றுக்கு தொடர்பில்லாமல் கோயில் பிரகாரங்களில் நின்று ஒலிபெருக்கியில் பாட்டு பாடும்படி தமிழ் ஓதுவார்களிடம் சொல்லி, மக்களை ஏமாற்றும் அநீதியையே தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த தமிழ்த் தீண்டாமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.