சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலுக்கான சூடு இப்போதே அதிகரித்துவிட்டது. இதில் தற்போது திமுக தலைமையிலான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மநீம, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஒருபுறம் போட்டியிடுகிறது. மறுபுறம் அதிமுக தலைமையில் பாஜக,பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் தவெகவும் கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறது. வழக்கம்போல நாம் தமிழர் கட்சி தனித்தே 234 தொகுதிகளிலும் களமிறங்கும் என அறிவித்துள்ளார் சீமான்.
இந்த சூழலில் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் சீமான், அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக வேட்பாளர்கள் அறிமுக கூட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது.