மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது - மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை


கோப்புப் படம்

வேலூர்: மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது என மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்தது.

இதைத்தொடர்ந்து வேலூரில் வெயில் தாக்கம் குறைந்தது. நேற்று காலை முதல் வெயில் அளவு குறைந்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. நேற்று முன்தினம் இரவு வேலூரில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

அப்போது, வேலூர், காகிதப்பட்டரை, சேண்பாக்கம் ஆகிய பகுதியில் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த பசுமாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. எனவே, மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "காற்று, மழை உள்ளிட்டவற்றால் அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே செல்லக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்கம்பிகள் பூமியிலிருந்து 15 அடிக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தால் அதனை கடந்தோ, அதன் அருகில் யாரும் செல்ல வேண்டாம். மின்கம்பத்திலோ அதனை தாங்கும் ஸ்டே கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. மின்மாற்றிகள், மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகேயும் செல்லக்கூடாது.

தற்போது, கோடைக்காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் மாற்றும் பணிகள், மின் வயர்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, மின் தொடர்பான பிரச்சினை இருந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’’என்றனர்.

x