மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கான கொட்டகை முகூர்த்தக்கால் நடும் விழா கீழமாசி வீதியிலுள்ள தேரடியில் நேற்று நடைபெற்றது.
மதுரையில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவாகும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வர். இந்தத் திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முதல் நிகழ்வாக தேர்களுக்கு அலங்காரப் பணிகள் தொடங்குவதை முன்னிட்டு திருவிழாவுக்கான கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கீழமாசி வீதி தேரடியில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் நேற்று நடைபெற்றது.
இதில் கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர்கள், சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் கோயில் வளாகத்தில் திருக்கல்யாண மேடை பந்தல் அமைப்பதையொட்டி முதல்நாள் நிகழ்வாக பந்தல் முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருவிழா நாட்களில் காலை, மாலை இரண்டு வேளையும் பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலா நடைபெறும்.
மே 6-ம் தேதி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 7-ம் தேதி திக்கு விஜயமும் நடைபெறும். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மே 8-ம் தேதி நடைபெறுகிறது. 9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி தீர்த்தவாரி பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும்.