‘திருவண்ணாமலை அரசு பள்ளியில் முட்டை கேட்ட மாணவன் மீது தாக்குதல்’ - முத்தரசன் கண்டனம்


சென்னை: திருவண்ணாமலை அரசு தொடக்கப்பள்ளியில் முட்டை கேட்ட மாணவர் தாக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள செங்குளம் கொல்லைமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றுள்ள அநாகரிகமான சம்பவம் மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் முட்டைகளை களவாடுவது மட்டுமின்றி தனக்கு முட்டை வேண்டும் எனக் கேட்ட மாணவனை சத்துணவு சமையளர் மற்றும் உதவியாளர் இருவரும் மாணவனை துடைப்பத்தால் அடித்திருப்பது மிகவும் அருவருக்கதக்க செயலாகும்.

இத்தகைய இழிவான நிலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென உள்ளூர் மக்கள் போராடியதன் காரணமாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துவதுடன், அதிகாரிகளின் கண்காணிப்பை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்திடல் வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்

x