உணவுத்துறை அதிகாரி சதீஸ்குமார் பணியிட மாற்றம் - தர்பூசணி விவகாரத்தால் நடவடிக்கையா?


சென்னை: சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தர்பூசணி விவகாரத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், சென்னை மாவட்டத்தையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சதீஷ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தர்பூசணியில் ரசாயன ஊசி செலுத்தப்படுவதால் மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படும் என உணவுத்துறை அதிகாரிகள் பரப்பிய தகவலால், தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் தோட்டத்திலேயே பழங்கள் வாங்க ஆள் இல்லாமல் அழுகின. இந்த சூழலில் இதுகுறித்து உணவுத்துறை அதிகாரி சதீஷ் குமார் மீது விவசாயிகள் கடுமையாக குற்றம்சாட்டினர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நல சங்க தலைவர் வெங்கடேசன், “ சமீபத்தில் ஊசி போட்ட தர்பூசணி பழத்தை விற்பனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் தவறான தகவல் பரவி வருகிறது. விவசாயிகள் எந்த ரசாயன உரத்தையும் தர்பூசணி விளைச்சலில் பயன்படுத்துவதில்லை, இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வதந்தி காரணமாக மக்கள் தர்பூசணியை வாங்க தயங்குகின்றனர். அதுபோல தர்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்காத காரணத்தால், பழங்கள் செடியிலேயே அழுகி போகின்றன.


நாங்கள் தர்பூசணியை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமாரிடம் தருகிறோம். அவர் அதில் ஊசி போட்டு எப்படி ரசாயனம் பரவுகிறது என்று காண்பிக்க வேண்டும். இல்லையேல் அவர் தர்பூசணி பற்றி கூறிய விஷயத்தை தவறு என்று வாபஸ்பெற வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் தவறான தகவலை பரப்பியதால் தமிழகம் முழுவதும் 50,000 ஏக்கர் தர்பூசணி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் குளிர்பான நிறுவனங்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூறி குளிர்பானங்களை விற்கின்றனர். ஆனால் மக்கள் தர்பூசணி, கிர்ணி, இளநீரை விரும்பி அருந்துகின்றனர். எனவே அந்நிய குளிபானங்களை விற்பனை செய்யவே தர்பூசணி பற்றி இதுபோல பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்

x