சிவகங்கை வனப்பகுதியில் 14 இடங்களில் தொட்டி, தடுப்பணைகள்: விலங்குகளின் தாகம் தீர்க்க ஏற்பாடு


சிவகங்கை: வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வனப்பகுதியில் மொத்தம் 14 இடங்களில் தொட்டிகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர் வனசரகத்தில் 20 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இங்கு 5,000-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் உள்ளன. இது தவிர காட்டுப்பூனை, புணுகுபூனை, குள்ளநரி, காட்டு எருமை, தேவாங்கு, கீரி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. மேலும் ஏராளமான மயில்கள் உள்ளன.

கோடைக் காலங்களில் வனப்பகுதியில் உள்ள சுனைகள் வற்றி, தண்ணீருக்காக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. அப்போது விபத்துகளாலும், நாய்கள் கடித்தும் புள்ளிமான்கள் உயிரிழந்து வருகின்றன. இதை தடுக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமையிலான அதிகாரிகள் வனப்பகுதியிலேயே வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

கம்பனூர், வேலங்குடி, மருந்தங்குடி, இலங்குடி ஆகிய இடங்களில் ஏற்கெனவே இருந்த தொட்டிகள் சீரமைக்கப்பட்டன. மேலும் கடந்த ஆண்டு கரிசல்பட்டியில் ரூ.13 லட்சத்தில் தொட்டி அமைக்கப்பட்டது. இது தவிர பிரான்மலையில் ரூ.6.5 லட்சத்தில் புதிதாக தடுப்பனையுடன் குளம் அமைக்கப்பட்டது.

வடகாட்டுச்செடி, ஏரியூர், கம்பனூர், மருந்தங்குடி ஆகிய இடங்களில் ஏற்கெனவே இருந்த தடுப்பனைகளுடனான குளங்கள் தலா ரூ.2.5 லட்சத்தில் சீரமைக்கப்பட்டன. மேலும் கரிசல்பட்டி உட்பட 6 இடங்களில் தடுப்பணைகள் நல்ல நிலையில் உள்ளன. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வனவிலங்குகளுக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் 1,600 ஹெக்டேர் நிலத்தை வனப்பகுதியாக மாற்றி வருவதாக தெரிவித்தனர்.

x