அருப்புக்கோட்டை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெட்டி கடத்தப்படும் பழமையான மரங்கள்


விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பழமையான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. இம்மரங்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி, மலைப்பட்டி, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் 30, 40 ஆண்டுகளுக்கு மேலான மரங்கள் அடியோடு வெட்டி இரவோடு இரவாக கடத்தப் பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பந்தல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட பச்சை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. அதேபோல் மலைப்பட்டி, கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு இரவோடு இரவாக கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து ஏற்கெனவே கோபாலபுரம் ஊராட்சி கிராம உதவியாளர், அருப்புக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காவிரி வைகை குண்டாறு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேம்பு, வேங்கை, புங்கை மரங்கள் வளர்க்கப்பட்டு சோலைவனமாக இருந்தது. கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மரங்கள் நிறைந்த தோட்டம்போல் காட்சியளித்தது. ஆனால், அங்கு உள்ள மரங்களை இரவோடு இரவாக வெட்டி லாரிகளில் கடத்தி உள்ளனர். மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களே இந்த மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு மரங்களை வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் யசோதாமணியிடம் கேட்டபோது, இதுதொடர்பாக வட்டார மருத்துவ அதிகாரியிடம் விசாரிக்க கூறியுள்ளேன். மரங்களை வெட்டியர்வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

x