திருவாரூர்: திருவாரூரில் 11 நாட்களில் 76 பேரை தெரு நாய்கள் கடித்துள்ளன. எனவே, தெரு நாய்களின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடித்து ஓரிரண்டு இடங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. சட்டப் பேரவையில் மட்டுமின்றி, மக்களவையிலும் இது தொடர்பாக விவாதங்கள் நடத்தப்பட்டுவிட்ட போதிலும், அதற்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
அந்த வகையில், திருவாரூர் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த தெரு நாய்கள் பொது மக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் தெரு நாய்கள் கடித்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, மார்ச் 20ம் தேதி 10 பேர், 21ம் தேதி 4 பேர், 23ம் தேதி 5 பேர், 24ம் தேதி 4 பேர், 25ம் தேதி 6 பேர், 26ம் தேதி ஒருவர், 27ம் தேதி 6 பேர், 28 மற்றும் 29 தேதிகளில் தலா 15 பேர், 30ம் தேதி 10 பேர் என 11 நாட்களில் 76 பேர் தெரு நாய்கள் கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். தெரு நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை அளித்து, அதன் உற்பத்தியை கட்டுப்படுத்துவது மட்டுமே இதற்கு தீர்வு.
ஆனால், நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு போதுமான கால்நடை மருத்துவர்கள் இல்லை. அதேபோல, உரிய அனுமதி பெற்ற தனியார் தொண்டு நிறுவனங்களும் அதிக அளவில் இல்லை. இந்தச் சூழலில், குறைந்த மருத்துவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு கருத்தடை அறுவை சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் தெரு நாய்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தி, தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.