நாகை: 'எம்புரான்' திரைப்படத்தை தடை செய்ய கோரி நாகை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், விவசாயிகள் பலர் தங்களின் குறைகளை எடுத்துக்கூறி, தீர்வு காண வலியுறுத்தினர்.
மேலும், கூட்டத்தில் விவசாயி தமிழ்ச்செல்வன் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளது: நடிகர் மோகன்லால் நடித்த 'எம்புரான்' என்ற மலையாள திரைப்படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது. அந்த திரைப்படத்தில், “தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை வெடிவைத்து தகர்க்க வேண்டும்” என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை மூலம் ஒரு கோடி விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், 152 அடி வரை தண்ணீர் சேமிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் 2006, 2014-ம் ஆண்டுகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் 'எம்புரான்' திரைப்படத்தில் வசனம் இடம்பெற்றுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ள 'எம்புரான்' திரைப்படத்தை தமிழக அரசும், மத்திய தணிக்கை வாரியமும் தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.