தஞ்சை: பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் சேவை ஏப்.6-ல் தொடங்கப்பட உள்ளதால், 19 ஆண்டுகால கனவு நனவாகிறது என ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கம்பன் விரைவு ரயில், அகல ரயில் பாதை பணிகளுக்காக 2006ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பின்னர், 2019-ல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகும் சென்னைக்கான இரவு ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஏப்.6ம் தேதி நடைபெற உள்ள புதிய பாம்பன் பாலம் திறப்பு விழாவின்போது, தாம்பரம்- ராமேசுவரம்- தாம்பரம் (16103 / 16104) தினசரி இரவு நேர ரயில் சேவையையும் பிரதமர் மோடி ராமேசுவரத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலுக்கான கால அட்ட வணையை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தாம்பரம்- ராமேசுவரம் விரைவு ரயில்(16103) தினமும் மாலை 6.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து, அங்கிருந்து நள்ளிரவு 12.32 மணிக்கு புறப்பட்டு, தொடர்ந்து அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு காலை 5.45 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து மீண்டும் பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில் பட்டுக்கோட்டைக்கு இரவு 7.50 மணிக்கு வந்தடைந்து, தொடர்ந்து தாம்பரத்துக்கு மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு சென்றடைகிறது. பட்டுக்கோட்டை பகுதி மக்கள் சென்னைக்கு சென்றுவரவும், ராமேசுவரத்துக்கு காலையில் சென்று தரிசனம் முடித்து மதியம் திரும்பி வரவும் இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, 19 ஆண்டுகால கனவான இந்த ரயிலை இயக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத் தலைவர் வ.விவேகானந்தம், துணைத் தலைவர் வே.ராமலிங்கம், செயலாளர் கு.முகேஷ், துணைச் செயலாளர் ஆத்மநாதன், பொருளாளர் ஈகா வைத்திய நாதன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.