சமூக விரோதிகளால் ஏலகிரி மலையில் காட்டுத் தீ; அரியவகை தாவரங்கள் கருகின


திருப்பத்தூர்: சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் மர்ம நபர்கள் வைத்த தீ காட்டுத் தீயாக மாறி மலையில் உள்ள அரிய வகை செடி, கொடி மற்றும் தாவரங்களை சேதமாக்கின.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையைச் சுற்றிலும் அடர்த்தியான வனப்பகுதி உள்ளது. இங்கு, அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் , கொடிகள், தாவரங்கள் அதிகமாக இருப்பதால் மலையில் ஏறும்போது இயற்கையான குளிர்ந்து காற்றுடன் மூலிகையும் சேர்ந்து வீசுவது சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது.

ஏலகிரி மலையைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகளுடன், வனவிலங்குகளான குரங்குகள், மான்கள், முயல்கள், கரடிகள் மற்றும் மலைப்பாம்பு உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன. மலைக்கு செல்லும் ஒரு சில சமூக விரோதிகள் மலைப்பாதையில் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, புகை பிடிப்பது, மது அருந்துவது, காலி மதுபாட்டில்களை மலை பாதையில் இருந்து கீழே தூக்கி வீசுவது, நெருப்புடன் கூடிய பீடி, சிகரெட்டை தூக்கி வீசுவதால் காய்ந்த புற்களில் தீப்பற்றி அவ்வப்போது தீ விபத்து மலையில் ஏற்படுகிறது.

இந்நிலையில், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டப்பனூர் பகுதி மலையடிவாரத்தில் நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்கள் சிலர் வைத்த தீயானது சற்று நேரத்தில் காட்டுத்தீயாக மாறி வனப்பகுதி முழுவதும் மளமளவென பரவியது.

இந்த தீ காப்புக்காட்டில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு (கீழிருந்து மேலாக) பற்றி எரியத்தொடங்கியது. இதனால், வனப்பகுதிக்குள் இருந்த அரியவகை மரங்கள், மூலிகைச்செடி, கொடிகள் தீயில் கருகி எரிந்து சேதமானது. மேலும், தீ வெப்பதால் சிறிய வகை உயிரினங்கள் கத்தி, கூச்சலிட்டப்படி அங்கும், இங்கும் சிதறி ஓடின

இது குறித்து வனத்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது குறித்து திருப்பத்தூர் வனச்சரக அலுவலர்கள் கூறும்போது, ”தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் ஏலகிரி மலையைச் சுற்றியுள்ள வனப்பகுதிக்குள் பல்வேறு மரங்களும், சருகுகளும் காய்ந்த நிலையில் உள்ளது. இப்பகுதியில் சிறிய தீப்பொறி பட்டாலே அது பெரிய தீயாக மாறி வனப்பகுதியை அழிக்கும் நிலையில் உள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையடிவாரம் பகுதிகளில் சந்தேகத்துக்கு உரிய நபர்களை பொதுமக்கள் கண்டறிந்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராம மக்களும் வனப்பகுதிக்குள் செல்வதும் சட்ட விரோதமான செயல் என்பதால் யாரும் வனப்பகுதிக்குள் நுழையக் கூடாது. வனப்பகுதியில் தீ வைக்கும் செயலில் ஈடுபடுவோர் கண்டறியப் பட்டால் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படும். ஏலகிரி மலையைச் சேர்ந்தவர்களுக்கும், சுற்றுலா வரும் பயணிகளுக்கும் தீ குறித்த போதிய விழிப்புணர்வு வனத்துறை சார்பில் வழங்கப்படும்” என்றனர்.

x