கவுன்சிலராக கூட வெற்றி பெறாதவர்களை ஆளுநராக்கி விடுவார்கள்: பாஜக மீது எஸ்.வி.சேகர் விமர்சனம்


திருவண்ணாமலை: கவுன்சிலராக கூட வெற்றி பெறாதவர்களை ஆளுநராக்கும் மிகப்பெரிய மனோபாவம் கொண்ட கட்சிதான் பாஜக என நடிகர் எஸ்வி சேகர் விமர்சனம் செய்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் எஸ்.வி. சேகர் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என்பது, பாஜகவுக்கு நல்லது. ஆனால், பாஜகவை அவர், ஏற்கெனவே அதல பாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டார். எனவே, பாஜகவுடன் யார்? கூட்டணி அமைத்தாலும், அவர்களுக்கு கேடாகவும் மற்றும் நஷ்டமாகவும் அமையும். பாஜகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக தலைவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்துவிட்டார். டெல்லியின் நிர்பந்தத்தால் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஏற்றுக்கொண்டாலும், அடிமட்ட தொண்டர்கள் ஏற்றுக்கொள்வது கஷ்டம்.

இன்றைய சூழ்நிலையில், திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் முதல்வரா க வருவார். இது, முழு பெரும்பான்மையுடன் நடைபெறும். எத்தனை கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெற இயலாது. ஒரு புறம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மறுபுறம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் வாக்குகளை பிரிக்க உள்ளதால், திமுகதான் ஆட்சி அமைக்கும். பாஜகவில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட கிடையாது. இவர்கள் எப்படி, முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள் என வக்பு வாரிய திருத்த மசோதாவை ஏற்பது.

எதை சொன்னாலும், செய்தாலும் தேசத்துக்காக செய்கிறேன் என்கிறார்கள். நான் தமிழகத்துக்கு விசுவாசமாக இருந்தால், அதுவும் தேசத்துக்கு விசுவாசமாக இருப்பதுதான். தேசத்தின் உள்ளேதான் தமிழ்நாடு உள்ளது. தேசம் என்பது தலை, கை, கால் என எல்லாம் இருக்கும் உடல். நான், தலைக்கு மட்டும் விசுவாசமாக இருப்பேன், கை மற்றும் கால்களுக்கு விசுவாசமாக இருக்கமாட்டேன் என்றால் சரியாக இருக்காது. இதை புரிந்து கொள்ளாமல், நான்தான் தேசப்பற்றாளர், நீங்கள் தேசத்துக்கு எதிரானவர்கள் என உளறுகின்றனர். திராவிடம் என்று சொல்வது தவறான வார்த்தை இல்லை. இது ஒரு நிலப்பரப்பு. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்பதுதான் திராவிடம். மற்றவர்கள் சொல்லவில்லை, திராவிடம் என தமிழ்நாடு சொல்வதற்காக பெருமைப்படுகிறேன். நானும் ஒரு திராவிடன்தான். இதில், எங்கிருந்து சாதி வந்தது.

ஆட்சி சிறப்பாக இருந்தால், சிறப்பாக இருக்கிறது என சொல்வதற்கு கூச்சப்படக்கூடாது. ஆனால், தூங்கி எழுந்ததும் எதுகை மோனையில் பேசுகிறார். அண்ணாமலை என்றால் பொய். பாஜகவில் எதற்கும் சரியாக இல்லை என்றாலும் ஆளுநராக்கி விடுவார்கள். கவுன்சிலராக கூட வெற்றி பெறவில்லை என்றாலும் ஆளுநராக செல் என கூறும் மிகப்பெரிய மனோபாவம் உள்ள கட்சிதான் பாஜக. அண்ணாமலை எதுவானாலும், தமிழகத்தில் இல்லாத வரைக்கும் தமிழக மக்களுக்கு நல்லதுதான். அண்ணாமலை இருந்தால் திமுகவுக்கு ரொம்ப நல்லது” என்றார். முன்னதாக அவருக்கு, கோயில் சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்.

x