கோவை: குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற நாளை சிறப்பு முகாம்!


கோவை: குனியமுத்தூர், சோமனூர், நெகமம் கோட்ட செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் – கோவை மின் பகிர்மான வட்டம் தெற்கு மேற்பார்வை பொறியாளர் மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த மார்ச் 26-ம் தேதி மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோட்ட அளவில் மின்துறை குறித்த புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் ஏப்ரல் 5-ம் தேதி ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

கோவையில் குனியமுத்தூர், சோமனூர் மற்றும் நெகமம் கோட்ட செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் இம்முகாம் ஏப்ரல் 5-ம் தேதி(சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். முகாமில் மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை மின்நுகர்வோர் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

x