மதுரை வெள்ளிமலை புனித காடு பாரம்பரிய பல்லுயிர் தலமாகுமா? - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு


மதுரை: இடையப்பட்டியில் நீர் கடம்ப மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ள வெள்ளிமலை புனித காட்டை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருவாதவூரைச் சேர்ந்த கார்த்திக், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் அமைந்து ள்ள வெள்ளிமலை புனித காடுகள் முருகனின் மலையாக கருதப்படுகிறது. இந்த வெள்ளி மலை புனித காடுகள் 3,500 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. தற்போது பரப்பளவு 1,500 ஏக்கராக குறைந்து விட்டது. மலையை சுற்றியுள்ள இடையப்பட்டி, தெற்கு ஆமூர், சொருகுளிபட்டி போன்ற 13 கிராமத்தினர் காடுகளை பாதுகாக்க ஆட்களை நியமித்துள்ளனர். வெள்ளிமலை புனித காட்டை பாதுகாக்க இடையப்பட்டி கிராம ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மலையில் 400-க்கும் மேற்பட்ட நீர் கடம்ப மரங்கள் உள்ளன. நீர் கடம்ப மரங்கள் இயற்கையாகவே வளரும் இடமாகும் இது. உசில், குருந்தம், மெய் குருந்தம், குறிஞ்சி, பூவந்தி போன்ற மரங்களும் உள்ளன. இந்த மரங்கள் சில இடங்களில் மட்டும் வளரும் அரிய வகையான மரங்களாகும். எனவே, இடையப்பட்டி வெள்ளிமலை புனித காட்டை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக தலைமை வனப் பாது காவலர், தமிழ்நாடு பல்லுயிர் வாரிய உறுப்பினர் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட வன அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

x