சட்டப்பேரவையையே போராட்ட களமாக மாற்றியிருக்கிறார் முதல்வர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு


சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி. படங்கள்: ம.பிரபு

இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதுபோல மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குவதாக தமிழக பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்த வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு சென்ற பிறகு, அதில் 14 கோரிக்கைகளை புதிதாக ஏற்கப்பட்டு பின்னர் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கோஷம் போட்டுள்ளனர்.

பொதுவாக சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது, போராட்டம் நடத்துவது போன்றவற்றை எதிர்கட்சியினர் தான் செய்வார்கள். ஆனால் இன்றைக்கு சட்டப்பேரவையையே போராட்ட களமாக மாற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவது என்பது வருத்தத்துக்குரியது. இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி, தேர்தலுக்காக வாக்கு வங்கி அரசியலை திமுக தேடிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக ஆளுங்கட்சியே சட்டப்பேரவையில் கோஷம் போடுவது என்பது இதுதான் முதல்முறை என்றும் நினைக்கிறேன். இதையெல்லாம் எங்கே போய் சொல்வது? முதல்வர் தான் நீதி வழங்க வேண்டும். ஆனால் இங்கு முதல்வரே நீதிமன்றம் செல்கிறார் என்றால் அதற்கு நாம் என்ன பண்ண முடியும்? இது தேவையில்லாத ஒன்று. இதையொட்டியே பாஜக இன்று வெளிநடப்பு செய்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்

x