குன்னூர்: வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக குன்னூரில் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து 3 மற்றும் 4-ம் தேதிகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, நெல்லை, குமரி, உட்பட 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு ஏற்ப இன்று காலை முதலே நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் வாரம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை நேரத்தில் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து குன்னூரில் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் மழைநீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இதேபோல் சிம்ஸ் பூங்கா பகுதிகளிலும் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் படகு சவாரி நிறுத்தப்பட்டது மேலும் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. ஊட்டியில் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது காற்றில் ஈரப்பதத்தின் அளவு 70 சதவீதம் இருந்தது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் நீலகிரியில் அவ்வப்போது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை காலநிலை மாறி மாறி நிலவுகிறது.