ஆடு வளர்ப்போர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல் 


மதுரை: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஆடு வளர்ப்போர் நல வாரியம் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் கலைக்கப்பட்டது. அதனை தற்போதைய தமிழக முதல்வர் மீண்டும் ஏற்படுத்தி ஆடு வளர்ப்போரின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மதுரையில் இன்று தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் எஸ்.திருநாகலிங்கம், மாநிலச் செயலாளர் முனியசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது: ''தமிழகத்தில் பாரம்பரிய தொன்மையான தொழில் ஆடு வளர்ப்பு. விவசாயிகளின் துணைத்தொழிலாகவும் உள்ளது. குழந்தைகளின் படிப்பு முதல் திருமணச் செலவுகள் வரை ஆட்டின் வருவாயை நம்பியே உள்ளனர். மீனவர்கள், நெசவாளர்கள், மலைவாழ் பனியர்கள் இவர்களைப்போல் ஆடு வளர்க்கும் இடையர்கள், குரும்பக் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து மேய்ச்சல் நிலங்களைத் தேடி நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆடு வளர்ப்பு தொழிலை மட்டுமே லட்சக்கணக்கான குடும்பத்தினரின் நலன் கருதி 2009-10-ல் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டார். அதற்குப்பின் வந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆடு வளர்ப்போர் நல வாரியம் கலைக்கப்பட்டது. ஐ.நா சபையில் 102 நாடுகள் சேர்ந்து 2026-ம் ஆண்டை உலக கால்நடை ஆண்டாக அறிவிக்கவுள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் சிறப்பு பொருளாதாரத் திட்டத்துடன் கவனம் செலுத்தி ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் அறிவித்தபடி நாய் கடித்தும் உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு ரூ.4 ஆயிரம் வழங்கும் அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் ஆடு வளர்க்கும் தொழிலில் யாதவர் இன மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் பரவலாக வாழும் இனம் யாதவர் இனத்தினர் அரசியலில் பின்தங்கியுள்ளனர். சமூக நீதியைப் பற்றி பேசும் திமுக கடந்த 50 ஆண்டுகளில் யாதவர் இனத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட எம்பியாக தேர்ந்தெடுக்கவில்லை. எனவே எம்பி தேர்தலிலும் யாதவர் இனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


x