தஞ்சை: பாபநாசம் அருகே வையச்சேரியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் வையச்சேரியில் நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு வையச்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், இப்பகுதிகளில் அண்மைக்காலமாக அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இங்குள்ள நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில் குமார், மாவட்ட நிர்வாகிகள் எம்.கனக ராஜ், கே.முத்துக் குமரன் உள்ளிட்ட விவசாயிகள் நேற்று கொள்முதல் நிலையத்திலேயே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியது: வையச்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 10 நாட்களாக அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில், கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இதனால் வெயிலில் எடை குறைந்து, மழை பெய்தால் ஈரப்பதம் கூடி, நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.
மேலும், இப்பகுதியில் தொடர்ந்து அறுவடை பணியும் நடைபெற்று வருகிறது. எனவே, உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறந்து, போர்க்கால அடிப்படையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். அதுவரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.