தஞ்சையில் ஓய்வு பெற்ற மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு; தனியார் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு


தஞ்சாவூர்: ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் மற்றும் குடும்பத்தினருக்கு வைப்பீடுக்கான முதிர்வுத் தொகையை வழங்காமல் ஏமாற்றிய நிதி நிறுவனம் ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் த.சண்முகநாதன். இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இதய மருத்துவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தினர் ஓராண்டு நிரந்தர வைப்பீடுகளுக்கு அதிக வட்டித் தருவதாகக் கூறியதை நம்பிய சண்முகநாதன், தனது பெயர் மற்றும் தனது மனைவி, 2 மகள்கள், 2 மருமகன்களின் பெயர்களில் அந்நிறுவனத்தில் 2018-19-ம் ஆண்டுகளில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

தொடர்ந்து, 2020-ம் ஆண்டு இதற்கான முதிர்வுத் தொகை ரூ.2.96 கோடியை வழங்குமாறு சண்முகநாதன் கேட்டபோது, அந்நிறுவனம் வழங்காமல் இழுத்தடித்தது. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சண்முகநாதன் உள்ளிட்டோர் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை குறைதீர் ஆணையத் தலைவர் த.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர். அதில், சண்முகநாதன் உள்ளிட்டோருக்கு முதிர்வுத் தொகை ரூ.2.96 கோடி, மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.1.10 கோடி, வழக்கு செலவுத் தொகையாக ரூ.3.50 லட்சம் என மொத்தம் ரூ.4.09 கோடியை வைப்பீட்டுத் தொகைக்கான வட்டியுடன் சேர்த்து 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என தனியார் நிதி நிறுவனத்தினருக்கு உத்தரவிட்டனர்.

x