குடோன் என கட்டப்பட்ட கட்டிடம்: தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் போராட்டம்


தஞ்சை: அம்மாப்பேட்டையில் குடோன் எனக் கூறி கட்டப்பட்ட கட்டிடத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கடைத்தெருவில் இருந்த 2 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அவிலாசத்திரம் குடியிருப்பு பகுதியில் 2 டாஸ்மாக் கடைகளை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் கட்டிடம் குறித்து கேட்டபோது, குடோன் கட்டுவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு, அந்தக் கட்டிடத்தில் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் அன்று இரவே நாகை- தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

ஆனாலும், நேற்று டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். இதன் காரணமாக, 2 டாஸ்மாக் கடைகள் முன்பும் நேற்று போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேல், டிஎஸ்பி முருகவேல் ஆகியோர் வந்து, போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், குடியிருப்பு பகுதிக்கு இடையூறு இல்லாமல் டாஸ்மாக் கடைக்குச் செல்ல மாற்றுப் பாதை அமைக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, 3 மணி நேரத்துக்கு பிறகு 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் பள்ளிக்கூடம், முருகன் கோயில், ஏரி ஆகியவை உள்ளன. அந்த ஏரியின் கரையில் பொதுமக்கள் சென்றுவர முடியாத வகையில், பாதையில் அமர்ந்து மதுபானம் அருந்துவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இந்த டாஸ்மாக் கடைகளுக்குச் செல்ல மாற்றுப் பாதை என்பது எங்களுக்கு நிரந்தர தீர்வு அல்ல. டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட உள்ளோம். நடவடிக்கை இல்லாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.

x