மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எஸ்.சம்பத். இவருக்கு 2017-ல் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கியபோது, ஒர்க்கிங் பிரிவிலிருந்து கண்காணிப்பாளர் பிரிவுக்கு மாறுபவர்களுக்கு வழங்கப்படுவதுடன் அல்லாமல் குறைந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
இதற்கு எதிராக சம்பத் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். மனுவை தனி நீதிபதி விசாரித்து, மனுதாரருக்கு ஒர்க்கிங் பிரிவிலிருந்து கண்காணிப்பாளர் பிரிவுக்கு மாறுபவர்களுக்கு வழங்கப்படுவது போல் மனுதாரருக்கும் 2.57 சதவீத காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அரசு போக்குவரத்து கழகத்தில் செப். 2016 ஊதிய ஒப்பந்த உயர்வு பலன்கள் அனைவருக்கும் செப். 2017ல் தான் வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரர் அதற்கு முன்பே பதவி உயர்வு பெற்று கண்காணிப்பாளர் பிரிவுக்கு வந்துள்ளார். இவருக்கு முன்பு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுபடி மனுதாரருக்கும் அதே காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கூறி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு போக்குவரத்து கழகம் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடும் தள்ளுபடியானது.
இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாததால் போக்குவரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திரரெட்டி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பத் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டது. அடுத்து விசாரணைக்கு வரும் போது போக்குவரத்து கழகம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிர்வாக இயக்குனர் சிங்காரவேலனிடம், ஏப்.22-க்குள் சீராய்வு மனுவில் ஏதேனும் சாதகமான உத்தரவு பெறப்படவில்லை என்றால், அன்று எதிர்மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என உத்தரவிட்டார்.