சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 37,023 பேர் நாய், பூனை மற்றும் இதர விலங்குகளால் கடிபட்டு பாதிக்கப்பட்டனர், என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்க்கடி மற்றும் பாம்புக் கடிக்கான விஷ முறிவு மருந்து, அவசர கால மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகளின் இருப்பு குறித்து ஆட்சியர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நாய்களின் பெருக்கத்தை கட்டுப் படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேபிஸ் என்பது ரேபிஸ் வைரசால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஓர் உயிர்கொல்லி நோயாகும். இந்நோய், பாதிக்கப்பட்ட மிருகங்களின் கடி மூலமாக, குறிப்பாக நாய், பூனை மற்றும் பிற விலங்குகள் அவற்றின் எச்சிலின் வழியே மனிதர்களு க்கும் மற்ற மிருகங்களுக்கும் பரவுகிறது. ரேபிஸ் நோய் 100 சதவீதம் தடுக்கக்கூடியது. ரேபிஸ் தாக்கிய பிராணியின் கடிக்குப் பின்னே முறையான தடுப்பு சிகிச்சை அளிக்கவில்லையெனில் உயிரிழப்பு ஏற்படுவது தடுக்க முடியாத ஒன்றாகும்.
சேலம் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டில் 37,023 பேர் நாய், பூனை மற்றும் இதர விலங்குகள் மூலம் கடிக்கு உள்ளாகி யுள்ளனர். இவற்றுள் 6 பேர் நாய்க்கடிக்கு உரிய நேரத்தில் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததாலும், நான்கு தவணை தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொள்ள தவறியதாலும் உயிரிழந்தனர். நடப்பாண்டில் இதுவரை 7,572 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
ரேபிஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தங்களது செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியமான ஒன்றாகும். அதேபோன்று, இதனை பராமரிப்பவர்களும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பான வழிமுறையாகும்.
செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், அவை கடித்தால் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசிகளை 4 தவணைகள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும். விழிப்புணர்வின்றி, நாய் அல்லது மற்ற பிராணிகள் கடித்த பிறகு, ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தாமல் இருக்கும்போது தான் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
நாய் கடித்தவுடன், கடித்த இடத்தில் சோப்பு போட்டு தண்ணீரில் 15 நிமிடம் வரை நன்றாக கழுவ வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று ஆலோசனை பெற வேண்டும். கடித்த இடத்தில் எருக்கம்பால் அல்லது பச்சிலை சாறு போன்றவற்றை தடவக் கூடாது. மந்திரித்தல், தாயத்து கட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, என்றார்.