புதுச்சேரி: பணிக்கு இன்று திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கையை மீறி என்எச்எம் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி சுகாதாரத் துறையின் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர் வரை 700க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் சொற்ப அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் என்எச்எம் ஊழியர்கள் பணி நிரந்தரம் அல்லது சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து சட்டசபையில் என்எச்எம் ஊழியர்களுக்கு ரூ.15,000. ரூ.12,000, ரூ.10,000 என மூன்று நிலை வாரியாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதனை என்எச்எம் ஊழியர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த 24ம் தேதி முதல் என்எச் எம் ஊழியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பணியை புறக்கணித்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்பவேண்டும். இல்லை என்றால் இன்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்ட இயக்கநர் கோவிந்தராஜன் எச்சரித்துள்ளார். ஆனால் ஊழியர்கள் எச்சரிக்கையை ஏற்கவில்லை. தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.