விருதுநகர்: சிவகாசி மாநகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்துக்கு அபராதம் விதித்த நிலையில் நகர் நல அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, தற்போது சுகாதார அலுவலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.8.50 கோடி வழங்கப்படுகிறது. ஒப்பந்த நிறுவனம் முறையாக தூய்மைப் பணி மேற்கொள்ளவில்லை என எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, பல்வேறு விதிமீறல்கள் தெரியவந்ததை அடுத்து, ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்க நகர் நல அலுவலர் சரோஜா பரிந்துரை செய்தார். இதுகுறித்து செய்தி வெளியானதை அடுத்து, ஒப்பந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த நிறுவனம் சார்பில் நகர் நல அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நகர் நல அலுவலர் சரோஜா கடந்த மாதம் தென்காசி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதே விவகாரத்தில் தற்போது சுகாதார அலுவலர் பாண்டிய ராஜன் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது மாநகராட்சி அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.