விருதுநகர்: சதுரகிரி செல்லும் பக்தர்கள் நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை தினந்தோறும் அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பல்வேறு வழிகாட்டுதல் களை வழங்கியுள்ளது. அதன்படி, சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தினந்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சோதனைச் சாவடி வழியாக அனுமதிக்கப்படுவர். கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை 4 மணிக்குள் திரும்பிவர வேண்டும்.
உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மலைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி வேறு எந்தப் பகுதியிலும் நுழையக் கூடாது. மலையேற்றப் பாதைகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. பாலித்தீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது.
மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும், வனத்துறை சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள். தடை செய்யப்பட்ட பொருட்களை யாரும் கொண்டு செல்லக் கூடாது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நாள்தோறும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.