தர்பூசணி குறித்து தவறான தகவலை நம்ப வேண்டாம்: தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தகவல்


திண்டுக்கல்: சுவைக்காக ரசாயனங்களை ஊசி மூலம் தர்பூசணியில் செலுத்துவதாக பரவி வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என தோட்டக்கலைத் துறை பழநி வட்டார உதவி இயக்குநர் பாலகுமார் தெரிவித்தார்.

கோடை காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நீர்ச்சத்து நிறைந்த பழம் தர்பூசணி. கடந்த சில நாட்களாக தர்பூசணி குறித்து வதந்திகள் பரவி வருவதால் விவசாயிகள் தர்பூசணிக்கு உரிய விலை கிடைக்காமல் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில் பழநி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள தர்பூசணி குறித்து விவசாய நிலத்தில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் பாலகுமார் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது: பழநி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 370 ஹெக்டேரில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. நிறத்துக்காகவும், சுவைக்காகவும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்தது.

தர்பூசணி பழங்களில் லைகோபின் என்ற மூலப்பொருளால் தான் சிவப்பு நிறமும், சுவையும் கிடைக்கிறது. எனவே, சமூக வலை தளங்களில் தர்பூசணி குறித்து பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியையும் பல்வேறு விதமான நன்மைகளையும் தரும் தர்பூசணி பழங்களை தயக்கமின்றி சுவைக்கலாம், என்றார்.

x