சித்திரை திருவிழா நேரத்தில் வைகை ஆற்றில் மேம்பாலம் கட்டுமானப் பணி; கலக்கத்தில் மதுரை மக்கள்


படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: சித்திரைத் திருவிழா நடைபெறும் நேரத்தில் கோரிப்பாளையம் வைகை ஆறு மேம்பால கட்டுமானப் பணியும் நடைபெறுவதால், இந்த ஆண்டு திருவிழாவில் திரளும் கூட்டத்தை சமாளிக்க, மாவட்ட நிர்வாகமும், மாநகர் காவல் துறையும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரையில் சைவமும், வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக சித்திரைத் திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வர். மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி அழகர் மீண்டும் மலைக்கும் திரும்பும் வரை 16 நாட்கள் விழா கோலாகலமாக நடைபெறும். நடப்பாண்டு இவ்விழா ஏப்.29-ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12-ம் தேதி நடக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், மாநகர் காவல்துறையும் போதுமான ஏற்பாடுகளை செய்யாததால் நெரிசலில் பக்தர்கள் உயிரிழக்க நேரிட்டது. 2023-ம் ஆண்டு நெரிசலில் சிக்கி 4 பக்தர்களும், கடந்த ஆண்டு 2 பக்தர்களும் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். கடந்த காலத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெறாத சூழலில் கடும் நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிகம் கூடும் கோரிப்பாளையம் தேவர் சிலை, கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் வைகை ஆற்று பகுதிகளில் மேம்பாலப் பணி நடந்து வருகிறது.

இதற்காக வைகை ஆற்றில் பிரம்மாண்ட தூண்கள் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக, கல்லூரி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மூங்கில் தெரு வழியாக வைகை கரை சாலைக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. அழகர்கோவில் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கட்டுமானப் பணிகளுக்காக அடைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் பாலம் ஸ்டேஷனில் இருந்து கோரிப்பாளையம் வரும் சாலையிலும் மேம்பால கட்டுமானப்பணி நடக்கிறது. வைகை ஆற்றுக்குள்ளும் மேம்பாலத்துக்கான பிரம்மாண்ட தூண்கள் கட்டி எழுப்பப்படுகிறது. பாலம் பணிகள் முழுமையடையாமல் அறையும் குறையாக பாதியில் நிற்கின்றன. வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலைகளும் மிக குறுகலாக உள்ளன. மேம்பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றி விடப்பட்டதால் நகர்பகுதி சாலைகளில் வரும் பெரும்பாலான வாகனங்கள், தற்போது இந்த வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலைகள் வழியாக செல்வதால் இந்த சாலைகளில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியமாக உருக்குலைந்து காணப்படுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதிகளில் எந்தவித கட்டுமானப் பணிகளும் நடக்காமலேயே நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மேம்பாலப் பணிகளும், அதற்கான கட்டுமானப் பொருட்கள் அங்கும், இங்குமாக போடப்பட்டுள்ளன. இந்த சூழலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க அமைச்சர்கள், ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை, மற்றும் மாநகர் காவல்துறையினர் இணைந்து, சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த உரிய முன்னேற்பாடு, ஆலோசனை நடத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தடுப்பணைகள் தூர்வாரப்படுமா ?: பக்தர்கள் கூறுகையில், ”கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழாவில் விஐபிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்கள் வைகை ஆற்றுக்கு சென்ற வர பிரத்தியேக பாதை அமைத்ததால் பொதுமக்கள் சென்றுவர இடையூறும், நெரிசலும் ஏற்பட்டது.

சித்திரைத் திருவிழாவில் கள்ளழர் எதிர் சேவை, ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை ஓட்டி 3 நாட்களுக்கு மதுரை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த திருவிழாக்களின்போது மது போதையில் ஏற்பட்ட மோதலால் கொலைச் சம்பவம் நடந்தது.

ஏவி மேம்பாலம் அருகே வைகை ஆற்றுப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 2 தடுப்பணை பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி சேறும், சகதியும் காணப்படு கிறது. அதனால், இந்த தடுப்பணைகளை தூர்வார வேண்டும்,” என்றனர்.

x