கடையநல்லூர் அண்ணாமலைநாதர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு


கடையநல்லூரில் உள்ள அண்ணாமலைநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அத்துமீறி சொந்தம் கொண்டாடு பவர்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களை போலீஸாரின் துணையுடன் அப்புறப்படுத்த உத்தரவி்ட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அண்ணாமலைநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறையாக பொது ஏலத்தில் எடுத்து வசித்து வரும் தங்களை, ஆக்கிரமிப்பாளர் எனக்கூறி அப்புறப்படுத்த தடை கோரியும், தங்களது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கக் கோரியும் கே.எஸ்.உதுமான் மொஹைதீன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி. மரியா கிளேட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை சார்பில் சட்டத்துறை இணை ஆணையர் ஜி.எஸ்.மங்கையர்கரசி சார்பில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகி தாக்கல் செய்த பதில் மனுவி்ல், ”கடையநல்லூர் அண்ணாமலை நாதர் கோயிலுக்கு சொந்தமாக 3.93 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை விற்பனை செய்ய கோயில் நிர்வாகம் விதிகளை மீறி எடுத்த முடிவின்படி கடந்த 1995ம் ஆண்டு அந்த நிலம் பொது ஏலம் மூலமாக தனிநபர்களுக்கு விற்கப்பட்டது. ஆனால் கோயில் நிலத்தை பொது ஏலம் மூலமாக விற்பனை செய்தது செல்லாது என்றும், இது தொடர்பாக தங்களிடம் எந்த முன் அனுமதியும் பெறவில்லை எனக்கூறி அந்த பொது ஏல விற்பனையை அறநிலையத்துறை ஆணையர் கடந்த 1997ம் ஆண்டு ரத்து செய்தார்.

இந்நிலையில், அந்த நிலத்தை பொது ஏலத்தில் வாங்கியவர்கள் தங்களது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த தென்காசி சிவில் நீதிமன்றம், அந்த பொது ஏலமும், விற்பனையும் செல்லாது என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்து கோயில் நிலத்தை மீட்க அறநிலையத் துறைக்கு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

அந்த கோயில் நிலம் கடந்த 30 ஆண்டுகளில் பலரது கைகளுக்கு மாறி, தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் கையில் உள்ளது. அந்த இடத்தை காலி செய்து கொடுக்கும்படி 23 பேருக்கு ஏற்கெனவே அறநிலையத் துறை சார்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், 58 பேர் நோட்டீஸை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த 81 பேரும் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களை காலி செய்ய முற்படும்போது ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிக் கூட்டமும் நடத்தப்பட்டது.

அதில், இவர்களுக்கு சட்ட ரீதியாக வாடகை விதி்க்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் வாடகையும் செலுத்த முடியாது என மறுத்து விட்டனர். எனவே, இந்த 81 ஆக்கிரமிப்பாளர்களையும் போலீஸாரின் உதவியுடன் கோயில் நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வரும் ஏப்.17 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், “கோயில் நிலத்தை அத்துமீறி சொந்தம் கொண்டாடுபவர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதேநேரம் அந்த நிலத்தில் வசிப்பவர்கள் வாடகை செலுத்த முன்வந்தாலோ அல்லது ஏப்.17-ம் தேதிக்குள் காலி செய்வதாக தெரிவித்தாலோ, அதற்கு அறநிலையத் துறை அனுமதிக்க வேண்டும்.

அனைவருக்கும் முறைப்படி நோட்டீஸ் பிறப்பித்து, எந்தவொரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி கோயில் நிலத்தை காக்க, அறநிலையத் துறை ஆணையர், தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு போலீஸார் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

x