வேலூர்: முறையாக சுத்திகரிக்கப்படாமல் குடிநீர் விநியோகம் செய்த 2 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கேன்களில் நிரப்பப்பட்ட குடிநீர் பாட்டில்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதேநேரம், குடிநீர் பாட்டில்களை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், பழனிசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.
இதில், கணியம்பாடி அருகேயுள்ள மினரல் வாட்டர் நிறுவனத்தில் அதிகாரிகள் குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, அழுக்கு படிந்த கேன்களை சரியாக சுத்தம் செய்யாமல் குடிநீர் பிடிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி இருந்தது தெரியவந்தது.
அதேபோல், குடியாத்தம் பகுதியில் உள்ள மற்றொரு மினரல் வாட்டர் நிறுவனமும் இதே குற்றச்சாட்டுடன் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ”கோடை காலத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 13 மினரல் வாட்டர் நிறுவனங்களில் ஆய்வு செய்துள்ளோம். கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப் படும். இதில், விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.