கோவை: பள்ளி குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை, தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் பெற்றோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சமீப காலமாக, பள்ளிக் குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை மற்றும் தட்டம்மை போன்ற நோய்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் இந்த நோய்த் தொற்று அதிகளவில் பரவும் அபாயம் உள்ளது. குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இந்த நோய்களால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த நோய்கள் அதிகளவில் பரவும் அபாயம் உள்ளது.
பொன்னுக்கு வீங்கி பாதிப்புக்கு உமிழ்நீர் சுரப்பிகளின் வீக்கம், காய்ச்சல், தலை வலி, தசை வலி மற்றும் சோர்வு ஆகியவை அறிகுறிகளாகும். சின்னம்மைக்கு சிவப்புநிற புள்ளிகள் அல்லது கொப்புளங்கள், காய்ச்சல், சோர்வு மற்றும் உடல்வலி, தட்டம்மைக்கு அதிக காய்ச்சல், இருமல், மூக்கில் ஒழுகுதல், கண்கள் சிவப்பாக மாறுதல் மற்றும் தடிப்புகள் உள்ளிட்டவை அறிகுறிகளாகும். பொதுவாக வைரஸ் நோய்த் தொற்றுகளுக்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தைகளுக்கு இவ்வித நோய்த் தொற்று அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகி, மருத்துவர் ஆலோசனைகளை பெறுமாறு பெற்றோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, மருத்துவ வசதி கிடைக்க செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். பள்ளி குழந்தைகளிடையே நோய்த்தொற்று அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
வகுப்பறைகள் மற்றும் பொது வெளிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளி மாணவர்களிடையே தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்கான, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தீவிரமாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.