சென்னை: சென்னையின் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ரூ.5,870 கோடி மதிப்பில் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பு கடிதத்தை, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) வழங்கியுள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. படிப்படியாக இப்பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. அனைத்து பணிகளையும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த 3 வழித்தடங்கள் மற்றும் மாதவரம், பூந்தமல்லி, செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் உட்பட 118.9 கி.மீ. நீளத்துக்கு இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான ஏற்பு கடிதம் ரூ.5,870 கோடி மதிப்பில் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.
ஏற்பு கடிதத்தை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அமித் குமார் ஜெயின் (இயக்கம் மற்றும் சேவைகள்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றின் உயர் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஒப்பந்தத்தில், 2-ம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள், 3 பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் அடங்கும். இதற்கான ஒப்பந்த காலம், 2-ம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து 12 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின், மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.