கோடை காலத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உபயதாரர்கள் மூலம் ஜூன் 10-ம் தேதி வரை இலவசமாக தயிர் சாதமும், காய்கறி கூட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் நாள் முழுவதும் பஞ்சாமிர்தமும், ஆறுகால பூஜைக்கு பின்னர் நைவேத்யம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர, நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தில் தினமும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பாலும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கோடை காலம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி உபயதாரர்கள் மூலம் நேற்று முதல் ஜூன் 10-ம் தேதி வரை தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை இலவசமாக தயிர்சாதமும், காய்கறி கூட்டும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் தினமும் குறைந்தது 3,000 பக்தர்கள் பயன்பெறுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.