கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்பிசி சலுகை; மீண்டும் வழங்க வலியுறுத்தி ஆலோசனை கூட்டம்


திண்டுக்கல்: கிறிஸ்தவ வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (எம்பிசி) சலுகையை மீண்டும் வழங்கிட வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.

வன்னிய கிறிஸ்தவ சமூக அமைப்பு சார்பில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தார். மறை மாவட்ட குரு குல முதல்வர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். இதில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊர் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். கோரிக்கைகள் குறித்து பிசி, எம்பிசி, டிஎன்சி பணிக்குழுவின் மாநிலச் செயலாளர் சாம்சன் ஆரோக்கிய தாஸ் பேசினார். வெள்ளோடு பங்குத் தந்தை ஜஸ்டின் நன்றி கூறினார்.

பின்னர், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆயர் தாமஸ் பால்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வன்னிய கிறிஸ்தவ சமுதாயத் துக்கு கடந்த 35 ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இந்து வன்னியர்களுக்கு எம்பிசி கொடுத்தது போல் கிறிஸ்தவ வன்னியர்களுக் கும் எம்பிசி வழங்க வேண்டும்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து இந்த சமூக அநீதியை கலைவோம் என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது, அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒரு லட்சம் பேரை திரட்டி மே 24ம் தேதி திண்டுக்கல் அருகே வெள்ளோடு பிரிவில் போராட்டம் நடைபெற வுள்ளது. தமிழகத்தில் 6 லட்சம் வன்னிய கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களுக்கு எம்பிசி சான்று வழங்க வேண்டும். தேர்தலில் யாருக்கு வாக்களிப் பது என்பது குறித்து இப்போது கூறமாட்டோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதை பொருத்து முடிவெடுப்போம் என்றார்.

x