முதல்வர் வருகைக்காக ‘பளிச்’ என மாறும் மதுரை மாநகர சாலைகள்!


மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க நாளை (ஏப்.3) முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் மதுரை வர உள்ளதால், அவர் வந்து செல்லும் வழித்தட சாலைகள், மறுசீரமைக்கப்பட்டு ‘பளிச்’ என்று மாறி வருகிறது. இதற்காக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மடைமாற்றம் செய்யப்பட்டு மாநாட்டு திடல் முதல், நகரில் தலைவர்கள் வந்து செல்லும் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி இரவு, பகலாக நடக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, இன்று தொடங்கி ஏப். 6-ம் தேதி வரை மதுரையில் நடக்கிறது. இம்மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக மற்ற பகுதிகளில் பணிபுரியும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மடைமாற்றம் செய்யப்பட்டு, மாநாட்டு சுற்றுவட்டாரப் பகுதிகள், தலைவர்கள் வந்து செல்லும் சாலைகள் மற்றும் முதல்வர்கள் வந்து செல்லும் பகுதிகளை இரவு, பகலாக சுத்தம் செய்து வருகின்றனர்.

தல்லாகுளம், தமுக்கம், கே.கே.நகர், அழகர்கோவில் சாலை, கோரிப்பாளையம் மற்றும் நத்தம் சாலை போன்ற பகுதிகளில் உள்ள அரசு பொதுச்சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தப்படுகிறது. மணல் உறிஞ்சும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சாலைகளிலும், அதன் ஓரத்திலும் குவிந்திருந்த மணல் அகற்றப்படுகிறது. ஏற்கெனவே மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பற்றாக் குறையாக காணப்படும் நிலையில், அவர்களை இதுபோல் விஐபிகள் வரும் பகுதிகளுக்கு அடிக்கடி மடைமாற்றம் செய்வதால் குடியிருப்பு பகுதிகளில் குப்பை தேங்குவதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வந்து செல்லும் அழகர்கோவில் சாலை உள்ளிட்ட சாலைகள் நேற்று முன்தினம் முதல் இரவு, பகலாக புதுப்பிக்கப்பட்டு 'பளிச்’ என்று புத்தம் புதிதாக போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை வரை, இந்த மோசமான சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள், நேற்று காலை திடீரென அந்த சாலைகள் ‘பளிச்’ என்று மாறியதை ஆச்சரியமாக கண்டு சென்றனர்.

பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பயணிக்கும் வரை இந்த மோசமான சாலைகளை பற்றி யாரும் கண்டுகொள்ளாத நிலையில், முதல்வர்கள் வருகையால் இப்போதாவது விமோசனம் கிடைத்ததே என்றும், இதுபோல் அடிக்கடி முதல்வர் மதுரை வந்தால்தான் நகர் முழுவதும் உருகுலைந்து காணப்படும் சாலைகளின் நிலை மாறுமா என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.

x