ராமநாதபுரம்: திரு உத்தரகோசமங்கை கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழ் முறைப்படி தமிழில் நடத்தக் கோரி, நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணியினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஏப்.4ம் தேதி நடைபெற உள்ளது. இக்கும்பாபிஷேக விழாவை, தமிழ் முறைப்படி தமிழில் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகன் கூறியதாவது: திரு உத்தரகோச மங்கை கோயில் குட முழுக்கு விழாவை தமிழ் முறைப்படி தமிழில் நடத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை யை முன்வைக்கிறோம். மதுரை உயர் நீதிமன்றத்தால் 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியில் இதற்கான பிறப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையின்படி, திரு உத்தரகோசமங்கை குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.